ஒரு கதவின் இருபக்கமும் நாங்கள் நின்றிருந்தோம் செல்ல வேண்டியதிருந்தது அவர் இந்தப் பக்கமும் நான் அந்தப் பக்கமும் ஒருவர் ஏந்தும்படி ஒருவர் நிறைக்கும்படி ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல நாங்கள் திறந்தோம் ஒரே திசையில் கதவை இழுத்தது போலுமல்லாமல் தள்ளியது போலுமல்லாமல் கதவு கதவற்றதாய் நெகிழ திறந்தது கருணையுடன்
திசை பிரிதல்
1. அந்தி எழ உயிர்கொள்கிறது உனது பேருந்து அறியாத கிரகத்திற்கோ கண்காணாத தேசத்திற்கோ நீ சென்றுவிட்டாலும் கண்டுபிடித்துவிடலாம் உன்னை ஆனாலும் இந்தப் பேருந்தின் கரகரப்பான செய்தி பயமூட்டுகிறது துளித்துளியாக காலம் என் எடையில் சேர்கிறது நினைவு வழி கடிதம் வழி மின்னஞ்சல் குறுஞ்செய்தி தொலைபேசித் திரையின்வழி நாம் தொடர்பில் இருப்போமென ஆறுதல் கொள்கிறோம் தனது அத்தனை கைகளாலும் பூமியை கடைசியாக ஒருமுறை பற்றிக் கொள்கிறது சூரியன் * 2. தழுவுதல் விலக்கி முளைவிடுகின்றன பிஞ்சுத் தளிரில் கிளைகள் வின்னோக்கிப் பிரிகின்றன மர்மப்பாதைகள் உனக்கு நினைவிருக்கிறதா இப்படித்தான் நம்மை நாம் பார்த்துக்கொள்ள இருவேறு உடல்களாக இந்த பூமிக்கு வந்தோம் * 3. நீ சென்றதால் உருவாகியது வருவதற்கான வழி தொலைந்து போகாமலும் நம்பிக்கை இழக்காமலுமிருக்க எனது சொற்களை நான் இந்தப் பாதையிடம் கொடுத்தனுப்பினேன் நுனியில் நிற்கும் மலரை அடைய கிளையைவிட துல்லியமான வேறு மார்க்கம் உண்டா குறுகிபிரியும் ஆயிரமாயிரம் சந்திப்புகளில் நீர்மணமுள்ள வழியை எனது காதல் தேர்ந்தெடுத்தது தயங்கித்தயங்கி அது சென்றுசேர்ந்த இடமோ ஒரு நட்சத்திரத்தை சுட்டி நின்றது.
பென்சில்
வளர்வது போல் தோற்றம் கொள்கிறது கூராக்கப்படும் பென்சில் சமயங்களில் மிகக்கூராகிவிடும் பென்சில்களின் பிரச்சினை ஒன்றுதான் மிகக்கூர்மையை காகிதத்தில் பயன்படுத்த முடியாது எவ்வளவு கவனமாக முயல்கிறோமோ அவ்வளவு பதியாமல் போய்விடும் எழுத்துக்கள் மெதுவாக எழுத எழுத நடுங்கத்துவங்கும் கோடுகள் குறுகிக்கறுகி கூர்மை முடியுமிடம் குழப்பமானதொரு எல்லை எப்படியும் கூர்மைக்கு மேல் ஒரு புள்ளி அதில் ஒரு மழுங்கல் அதன் கருணையால் மட்டுமே எழுத முடிகிறது தெளிவாக
தொடு
ஒரு மலரைத் தொடுகையில் செடியைத் தொடுகிறாய் மண்ணை வேரை நீரைத் தொடுகிறாய் இனி ஒரு மலரைத் தொட மலருக்கு கொஞ்சம் மேலே மலரை தொடுவதுபோல் தொடு விரல் விரியும் வெளியெலாம் தொடு
இருளில் மலை வரைவது இன்னும் ஆழமான இருளை
எந்தப் பரபரப்பின் இடையிலும் மின்சாரம் போய்விட்டால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது தலை போகிற காரியங்களுக்கு கிடைக்கும் ஓய்வு தலையைக் காக்கிறது இருள் கொட்டியதும் குழந்தைகள் ஏன் அவ்வளவு உற்சாகமாய் கூச்சலிடுகிறார்கள் இருளின் நடுவில் ஏற்றிவைத்த சுடரோ நிலைத்தே நிர்பதில்லை மொத்த வீட்டையும் அதுதான் உறுதியிழக்கச் செய்கிறது இருள் போல இயல்பான அமைதியை எதுவும் தருவதில்லை இருள் கொடுக்கும் நம்பிக்கைக்கு எதிராய் காரணங்களே இல்லை. * நன்றி - அகழ், பிப்ரவரி 2023
எங்கிருந்தோ பார்க்கும்போது இல்லாமலாகியிருக்கக்கூடிய ஒரு நட்சத்திரத்துள் நாம் இருக்கிறோம் எதிரெதிரே நடுவே நாமெனும் துளி பூத்துவிரிய இறங்காத குளத்தைச்சுற்றி காத்து நிற்கின்றன நட்சத்திரங்கள்
ப்ளம் கேக்
கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு நாங்கள் ஒரு மலைப்பாறையின் மீதமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் இந்த பிறந்தநாளை எப்படி சிறப்பாகக் கொண்டாடலாமென வானமோ அன்றுபார்த்து ஒரு ப்ளம் கேக்கைப் போல் பொங்கி வந்தது நாங்கள் உற்சாகமானோம் “அவன் வயது எண்ணிலடங்காததென” மினுங்கின அதன்மீது ஏற்றிவைத்த நட்சத்திரங்கள் நாங்கள் குழம்பினோம் இதுவரை எத்தனை தீபங்கள் அவன் பொருட்டு ஏற்றப்பட்டனவோ அத்தனையும் அங்கு இருந்தன அவனோ தன்னை நோக்கி ஏற்றிவைத்த தீபமெதையும் இதுவரை அணையவிட்டதுமில்லை இருந்தாலும் நாங்கள் குழந்தைகள் இன்று அவன் பிறந்தநாள் நாங்கள் சொன்னோம் “ஏற்றும் ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் அவனின் ஒரு வயது கூடுகிறது.. ஒவ்வொன்றாய் அணைத்து நாம் அவன் வயதைக் குறைப்போம்..” அப்படி நாங்கள் இரவெல்லாம் விழித்திருந்து ஊதி ஊதி தளர்ந்தோம் ஒருவழியாய் முடித்தோம் என நினைக்கையில் ஒரு அறுந்தவால் நட்சத்திரமொன்று அங்குமிங்கும் ஓடித்திரிந்தது சரியாக அப்போதே பாதி அழுந்திய செர்ரிப் பழம்போல் அவனின் ஒரு விரல் நுனி மெல்ல எழுந்தது கண்கள் கூசும்படி அவன் மீண்டும் தோன்றினான் நாங்கள் பாடினோம் “ஹேப்பி.. பர்த்டே.. இயேசுகுட்டி..”
ஆறு மணி சுமாருக்கு மட்டும் உன்னை ஞாபகப்படுத்தும் ஒரு மரம் உண்டு ஜங்க்ஷனில். அன்றுமுழுதும் சேகரித்த பெரிய பெரிய நிழல்களுடன் அதற்கெனவே காத்திருக்கும் அத்தனைப் பறவைகள்.
நதியில் இலையென ரயிலில் இருக்கிறேன் ஊர்களில் ஏற்றிவிடப்பார்க்கிறது நதி. நதியளவுக்கே நீண்டுவிடுகிறது இலை. உனக்கும் நினைவிலிருக்கும் போய்விடுமென அன்று நீ குனிந்து நதியில் விட்ட அந்த நிழல் ஆழ ஆழச்சென்றது அதிலிருந்து திமிரி மேலெழுந்த ஒரு மலர் நதியை அழைத்துச்சென்றது